அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக எம்பி சி.வி.சண்முகம் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக எம்பி சி.வி.சண்முகம் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேரவேலை தொடர்பான சட்டத் திருத்தம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசி யிருந்தார்.

அதையடுத்து தமிழக அரசுமற்றும் முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் 4 அவதூறு வழக்குகள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்த 4 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பாக விசார ணைக்கு வந்தது.

அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ``மனுதாரர் தமிழகமுதல்வரை நேரடியாக தாக்கிப்பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்துப் பேசியுள்ளார். அதிமுகவின் போராட்டத்துக்குப் பிறகே 12 மணி நேர வேலை என்றஅரசின் அறிவிப்பை தமிழக அரசுதிரும்பப் பெற்றுள்ளது. அப்படியிருக்கும்போது மனுதாரரின் கருத்து எப்படி அவதூறானதாகக் கருத முடியும். இந்த விஷயத்தில் தமிழக அரசு இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது'' என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ``தமிழக அரசையும்,முதல்வரையும் இஷ்டத்துக்கு விமர்சித்துப் பேசிய அதிமுக எம்பி சி.வி.சண்முகம், தற்போது அது அவதூறு இல்லை என எப்படி குறிப்பிட முடியும்'' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in