Published : 19 Jan 2024 04:06 AM
Last Updated : 19 Jan 2024 04:06 AM
சேலம்: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நாளை மறு நாள் ( 21-ம் தேதி ) நடைபெற உள்ளது. இதல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டையொட்டி 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்
திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் வரும் 21-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்காக மாநாட்டுத் திடலில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் திமுக கொடியை துணை பொதுச் செயலாளரும், எம்பி-யுமான கனி மொழி ஏற்றி வைக்கிறார். திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரவேற்கிறார்.
காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பல்வேறு தலைப்புகளில் கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள் உரையாற்றுகின்றனர். மாலை 6.30 மணிக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுக்கு தலைமையேற்று உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, பொதுச் செயலாளர் துரை முருகன் பேசுகின்றனர். இரவு 7.30 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார்.
சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி பிரபு நன்றி கூறுகிறார். மாநாடு நடக்கும் திடல் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை முதல்வர் வருகை: முன்னதாக நாளை ( 20-ம் தேதி ) மாலை, 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் புல்லட் பேரணி மாநாட்டு திடலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் நாளை பிற்பகல் சென்னையிலிருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைகின்றனர். கொண்டலாம் பட்டியில் மேற்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் வரவேற்பும், மேட்டுப்பட்டியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் பெரியார் நுழைவு வாயில், அண்ணா திடல், கலைஞர் அரங்கம், பேராசிரியர் மேடை, வீரபாண்டியார் கொடி மேடை, முரசொலி மாறன் புகைப்பட கண்காட்சி அரங்கம் இடம் பெற்றுள்ளன. வீரபாண்டி ராஜா, வீர பாண்டி செழியன், நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா, தனுஷ் பெயர்களில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் மாநில சுயாட்சியை வலியுறுத்தும் வகையிலும்,மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலும் மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
பலத்த பாதுகாப்பு: தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் தலைமையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT