Published : 19 Jan 2024 04:00 AM
Last Updated : 19 Jan 2024 04:00 AM

ஆலந்தூர் - மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையே மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2 வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு வாகன சேவை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, இந்த இணைப்பு வாகன சேவைகள் ஐடி பூங்காக்களில் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், பாஸ்ட் ட்ராக் நிறுவனமும் இணைந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயந்த் டெக் பூங்கா மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பார்க் இடையே சுமார் 5 கி.மீ தொலைவுக்கு சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இயக்கப்படும். இந்த நேரம் பயணிகளின் தேவைக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டது.

பாஸ்ட் ட்ராக் கேப்ஸ் மொபைல் அப்ளிகேஷனில் மெட்ரோ கனெக்ட் சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நபருக்கான கட்டணம் ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம், வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்வதற்காக, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போதுள்ள வாகன நிறுத்தம் பகுதியில் பாதி அளவுக்கு நாளை ( ஜன.20 ) முதல் 2 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகனம் நிறுத்தும் பகுதியைப் பயன்படுத்திகொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x