ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை: திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் வருகையையொட்டி, நாளை ( ஜன.20 ) காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, குளித்தலை,முசிறி, துறையூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். எதிர் வழித் தடத்திலும் இதே வழியை பயன்படுத்த வேண்டும். சேலம், நாமக்கல் வழித் தடத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் முசிறி, குளித்தலை, மணப் பாறை, விராலி மலை வழியாக சென்று வர வேண்டும்.

கோவை, கரூர் வழித் தடத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, மணப்பாறை, விராலி மலை வழியாக சென்று வர வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை வழித் தடத்தில் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம், சோதனைச் சாவடி எண்.2, திருச்சி சுற்றுச் சாலை வழியாக சென்று வர வேண்டும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் சேலம் வழித் தடத்தில் செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சிலை, சாஸ்திரி சாலை, கரூர் புறவழிச் சாலை, அண்ணாசிலை, ஓயாமரி சாலை, சென்னை புறவழிச் சாலை வழியாக செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூர், அரியலூர், பெரம்பலூர், சமயபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூர், குணசீலம் செல்லும் பேருந்துகள் அண்ணாசிலை, ஓயாமரி சாலை, சென்னை புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். நம்பர் 1 டோல் கேட்டிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் திருவானைக் காவல் டிரங்க் சாலையை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். பிரதமரை வரவேற்க பஞ்சக்கரை சாலை வரும் கட்சியினரின் வாகனங்கள் திருவானைக் காவல் டிரங்க் சாலை சோதனைச் சாவடி எண்.6 அருகே கட்சியினரை இறக்கி விட்டு, நெல்சன் சாலை ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பஞ்சக்கரை சாலை ( ஹோட்டல் ) சந்திப்பு முதல் முருகன் கோயில், வடக்கு வாசல், அனைத்து உத்திரமற்றும் சித்திர வீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் எந்த வாகனங்களும் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி இல்லை. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் மாம்பழச் சாலை, திருவானைக் காவல் வழியாக அழகிரிபுரம் வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப வேண்டும் என ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in