

எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் டேவிட். எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் பி-2 பிளாக் 13-ம் எண் வீட்டில் வசிக்கிறார். கடந்த 28-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றிருந்தார்.
இவரது பக்கத்து வீட்டில் தடா நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வசிக்கிறார். அவர் சனிக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். நீதிபதி டேவிட் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
எழும்பூர் போலீஸார் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. சுமார் 30 பவுன் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. அவர் சென்னை திரும்பிய பிறகுதான், வேறு ஏதாவது திருட்டுபோயுள்ளதா என்று தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.