உதயநிதி Vs வானதி முதல் ஈரான் Vs பாகிஸ்தான் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.18, 2024 

உதயநிதி Vs வானதி முதல் ஈரான் Vs பாகிஸ்தான் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.18, 2024 
Updated on
3 min read

பிரதமர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு: பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையை ஒட்டி சென்னையில், பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

திமுக இளைஞரணி மாநாடு - ஸ்டாலின் நம்பிக்கை: “ஆளுநர்களின் அரசியலை வீழ்த்தும் தேவையை உணர்த்தக் கூடியதாக சேலம் இளைஞரணி மாநாடு இருக்கும்” என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சேலத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

உதயநிதி Vs வானதி @ அயோத்தி ராமர் கோயில்: “மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை”

ராமர் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்கக் கூடாது என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ராமர் கோயில் திறப்புக்கோ, மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. ஆனால், மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், “மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துதான் என நாங்கள் கூறவில்லை. உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. எனவே, இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளருக்கு ஒப்படைப்பதுதானே நியாயமாக இருக்கும். உதயநிதியின் விவாதத்தின்படியே பார்த்தாலும், கோயில் இருக்கிற இடத்தை கோயிலுக்குக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

2-வது சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்: 'கழுகு' என பெயரிடப்பட்ட 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்டோபர் 2026-ல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்ணை தாக்கியோர் மீது நடவடிக்கை - அண்ணாமலை வலியுறுத்தல்: “பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார். உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி கூறியுள்ளார்.

உறைபனியில் உறைந்த உதகை: நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உறைபனியில் உதகை உறைந்துள்ளது.

உதகை குதிரை பந்தய மைதானம், அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் ஆகிய பகுதிகளில் கடுமையான உறைபனி நிலவியது. புல்வெளிகள் அனைத்தும் உறைபனியால் வெள்ளிக்கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தன.

இந்த உறைபனியின் தாக்கத்தால் தேயிலை மற்றும் பல்வேறு பயிர்களும் கருகி வருகின்றன. தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் தொடர்ந்து கருகி வருவதால் வனங்களில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம் பெயரவும் வாய்ப்புள்ளது என்று நீலகிரி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நியாய யாத்திரையை ‘மடக்கிய’ அசாம் கிராமத்துப் பெண்கள்!: அசாம் மாநிலத்தில் அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்துக்கான படிவங்களை வாங்க கிராமப்புற பெண்கள் வரிசையில் காத்திருந்த நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரை வாகனம் தங்களைக் கடந்து செல்வதைப் பார்த்து, தாங்கள் காத்திருந்த வரிசையை விட்டுவிட்டு ஆர்வமாக ஒடிச் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பெரியார் பல்கலை. துணைவேந்தர் தொடர்ந்த வழக்கில் கேள்வி: ‘புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன் தொடர்ந்த வழக்கில் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், ஆவணங்களை ஆய்வு செய்வதாகக் கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

ஈரான் Vs பாகிஸ்தான் - நடப்பது என்ன?: பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஈரானில் 9 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஈரான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 2 சிறுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கொடுக்கப்பட்ட பதிலடியில் பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி தாக்கி வருகின்றனர். இது இன்று முளைத்த புதிய பிரச்சினை இல்லை என்றாலும் ஏவுகணை, ட்ரோன் வீசி தாக்கிக் கொள்வது என்பது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இதனிடையே போர் மேகம் சூழும் வேளையில் ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவு: பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் செவ்வாய்க்கிழமை இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஈரான் தற்காப்பு நடவடிக்கையாகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in