

மதுரை: உயிரிழப்பு இல்லாமல் நடந்து முடிந்த மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க விழிப்புணர்வும், ஏற்பாடுகளும் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
உடனுக்குடன் முதலுதவி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தப் போட்டிகளில் கடந்த காலங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு, நடந்து முடிந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை.
படுகாயம் அடைந்தவர்கள் கூட உடனுக்குடன் வாடிவாசல் களத்தில் இருந்து மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கி மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கி அவர்கள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளன. மருத்துவக் குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ்களும், ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலே தற்காலிக மருத்துவமனைகள் அமைத்து, படுகாயமடைந்தவர்களுக்கு துரித சிகிச்சை வழங்கப்பட்டது.
மருத்துவமனை சிகிச்சைகள்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 மாடுபிடி வீரர்கள், 25 காளை உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள், 5 காவலர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயராஜன், தூத்துக்குடி காவல் நிலை ஆய்வாளர் அன்னராஜ், இரு சார்பு ஆய்வாளர்கள், 14 மாடுபிடி வீரர்கள், 15 காளை உரிமையாளர்கள், 10 பார்வையாளர்கள் உள்பட 43 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டியில், 2 பெண் காவலர்கள் உள்பட 6 காவலர்கள், ஒரு 108 ஆம்புலன்ஸ் ஊழியர், 31 மாடுபிடி வீரர்கள், 18 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள் உள்பட 83 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 11 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பார்வையாளர்களிடம் விழிப்புணர்வு: உயிரிழப்பு ஏற்படாவிட்டாலும் பல்வேறு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உடல்களில் காயம் ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களால் முன்போல் தற்போது இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. அதனால், அவர்கள் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரிய காயங்கள் கூட ஏற்படாமல் இருக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாடுபிடி வீரர்கள் முறையான பயிற்சியுடன் களம் இறக்கப்பட வேண்டும்.
காளை உரிமையாளர்கள், வாடிவாசலில் இருந்து அவர்கள் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதும், அந்த காளையை மாடுபிடி வீரர்கள் பிடிக்காமல் இருக்கவும், காளையை உற்சாகப்படுத்துவுதாக கூறி அதன்பின்னே ஓடிக் கொண்டே இருப்பார்கள். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் காளைகளே அவர்களை கொம்புகளைக் கொண்டு குத்தி கீழே தள்ளிவிடுகின்றன.
பாதுகாப்பு விதிகளை மீறுவதால் உயிரிழப்பு: பார்வையாளர்கள், கேலரி பகுதியில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்காமல் போட்டி நடக்கும் இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக கூறி காளைகள் சேகரிக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து மாடுபிடி வீரர்களிடம் இருந்து தப்பி பீதியுடன் ஓடிவரும் காளைகள், பார்வையாளர்களைப் பார்த்ததும், தங்களை அடக்க வருவதாக எண்ணி அவர்களை முட்டி மோதி கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகின்றன.
மாடுபிடி வீரர்கள், காளைகளை அடக்க ஒன்றிற்கும் மேற்பட்டோர் காளைகள் மீது விழுகின்றனர். அதில் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு காளைகள் கால்கள், கொம்புகளில் போய் அவர்களாகவே விழுகின்றனர். அதனால், படுகாயம் அடைகின்றனர். சிலர், உயிரிழக்கவும் செய்கின்றனர். அதனால், இந்த ஆண்டு போல் உயிரிழப்பு இல்லாத ஜல்லிக்கட்டு தொடரவும், படுகாயங்களை குறைக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், முன்தயாரிப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.