நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு: பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்துக்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடக்க உள்ளன. இதை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ம் தேதி (நாளை) சென்னை வருகிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அந்த வகையில், நேப்பியர் பாலத்தில் இருந்து சிவானந்தா சாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தமிழகம் ஒரு ஆன்மிக பூமி என்ற அடிப்படையில் ரங்கம், ராமேசுவரம் செல்லும் அவர், அங்கிருந்து நேரடியாக அயோத்தி சென்று ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். அதற்கு பிறகும் நேரம் இருந்தால் மட்டுமே தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்கின்றனர்.

பிரதமர் மோடி கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தனது இல்லத்துக்கு கிறிஸ்தவ மக்களை அழைத்து பண்டிகை கொண்டாடினார். வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் விஷயத்தில் அவருக்கென உரிமை இருக்கிறது. தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை என்று திமுக தலைவரிடம் கேட்க வேண்டும். திமுகவுடன் எங்கள் உறவு மேம்படவில்லை. எதிர்ப்பு அரசியல்தான் செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in