Published : 18 Jan 2024 05:46 AM
Last Updated : 18 Jan 2024 05:46 AM

எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் | இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்; இதயங்களை வென்றவர் என பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் பங்கேற்று, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூகநீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதல்வராகவும், மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

அரசு சார்பில் சென்னை, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ள பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரன், பி.கே.சேகர்பாபு, ஆகியோர் பங்கேற்று எம்ஜிஆர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, செய்தித்துறை செயலர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் அதன் தலைவர் சி.பொன்னையன் ஏற்பாடு செய்திருந்த 107 கிலோ கேக்கை வெட்டி, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார். மகளிருக்கு சேலைகளும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல் அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இதேபோல் வி.கே.சசிகலா சென்னையில் உள்ள தனது இல்லத்தில், எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசர், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x