Published : 18 Jan 2024 04:00 AM
Last Updated : 18 Jan 2024 04:00 AM
கோவை: வட கோவை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது சென்ட்ரல் திரையரங்கு. 1950-களில் ராமசாமி நாயக்கர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த திரையரங்கு 2000 ஆண்டுக்கு பின்பு வரை கூட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் திகழ்ந்தது.
கரோனா நோய் தொற்று பரவலுக்கு முன் இந்த திரையரங்கு நிர்வாக காரணங்களால் மூடப்பட்டது. இந்நிலையில், திரையரங்கை நிர்வகித்து வந்த தம்பு என்ற ஸ்ரீராஜ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது இழப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பால சுப்பிரமணியம் கூறியதாவது: சென்ட்ரல் தியேட்டரை நிர்வகித்து வந்த ராமசாமி நாயக்கர் காலத்துக்கு பின் அவரது மகன் மணி என்ற பாலசுப்பிரமணியன் திரையரங்கை நடத்தி வந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் தம்பு என்று அழைக்கப்பட்ட ஸ்ரீராஜ் நிர்வகித்து வந்தார். மொத்தம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த திரையரங்கு வளாகத்தில் 1980 வரை சென்ட்ரல் என்ற ஒரு திரையரங்கு மட்டும் செயல்பட்டு வந்தது.
பின்னர் கனக தாரா என்ற மற்றொரு திரையரங்கு அதே வளாகத்தில் தொடங்கப்பட்டது. இரண்டும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் திகழ்ந்து வந்தன. நிர்வாக காரணங்களால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் திரையரங்கு மூடப்பட்டது. நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படம் வரை இந்த திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது. உரிமையாளர் தம்பு என்று அழைக்கப்பட்ட ஸ்ரீராஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது வருத்த மளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT