Published : 18 Jan 2024 06:20 AM
Last Updated : 18 Jan 2024 06:20 AM

பத்திரப் பதிவுத் துறையில் 2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பத்திரப் பதிவுத் துறையில் 2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழகத்தில், யாரிடமும் கலந்தாலோசிக்காமல், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்காமல், சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி திமுக அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

வழிகாட்டி மதிப்பை 50 சதவீதம் வரை உயர்த்தியதால் பொதுமக்களும், கட்டுமான நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் மற்றும் சில கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு பிறப்பித்த வழிகாட்டி மதிப்பு உயர்வு அறிக்கை சட்டவிரோதமானது என்றும் புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017-ம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து கூடுதல் கட்டணத்தையே அரசு வசூலித்து வருகிறது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். தீர்ப்புக்கு எதிராகக் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதும், அந்தக் கட்டணம் உண்மையில் அரசு கருவூலத்துக்குத் தான் செல்கிறதா என்பதிலும் மக்களுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, பத்திரப்பதிவுத் துறையில் 2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகஇத்தனை நாட்களாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்குத் திருப்பித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x