

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் நேற்று முன்தினம் பேத்துப் பாறை அருகேயுள்ள அஞ்சு வீடு அருவி பகுதியில் குளிக்கச் சென்றனர். அதில் 2 பேர் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி மாயமாகினர். விசாரணையில், கொடைக்கானல் ஆனந்த கிரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி மகன் கோகுல் ( 21 ), நாசர் மகன் யாசின் என்ற நதீர் ( 21 ) என்பது தெரிய வந்தது. உடன் சென்ற நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீஸார், தீயணைப்பு துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்தி விட்டு, நேற்று காலை மீண்டும் தேடினர். அப்போது அருவி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்து 2022-ல் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆனால், தற்போது வரை எந்த வித பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தவில்லை. அதனால் இந்த அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்தும், நீரில் மூழ்கியும் உயிரிழப்பது தொடர்கிறது. உடனடியாக பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.