

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பொய்யப் பாக்கம் காலனியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் டூ மாணவி ஒருவர், ஜன. 15-ம் தேதி வயிற்று வலி காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்ததாக குற்றஞ்சாட்டி மருத்துவமனை வாயில் முன்பு உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், மருத்துவமனை உறைவிட மருத்துவர் ரவிக் குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், புகாரின் பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
காவல் நிலையத்தில் புகார்: இந்நிலையில், மாணவியின் உயிரிழப்பு குறித்து அவரது தந்தை நேற்று முன்தினம், விக்கிர வாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், சரியாக சிகிச்சை அளிக்காததால் தனது மகள் உயரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் உடற்கூறு ஆய்வு செய்த பின், அந்த மாணவியின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப் பட்டது. தொடர்ந்து மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.