

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே வெங்கலக் குறிச்சி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் 300 ஏக்கர் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் வெங்கலக்குறிச்சி, விளங்குளத்தூர், புளியங்குடி, காக்கூர், பிரபக்கலூர், பொசுக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் சமீபத்தில் பெய்த மழையால் வயலிலேயே நெல் மணிகள் முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
அதேபோல், இப்பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப் பட்டிருந்த மிளகாய் செடிகளும் வயல் வெளிகளில் தேங்கிய மழை நீரால் அழுகி சேதமடைந்தன. வெளியூர்களில் மிளகாய் கன்றுகள் விலைக்கு வாங்கி நடவு செய்த நிலையில் தற்போது அனைத்தும் அழுகிவிட்டதால் மிளகாய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த மிளகாய் மற்றும் நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.