Published : 17 Jan 2024 05:34 AM
Last Updated : 17 Jan 2024 05:34 AM

திருவள்ளுவரின் வரலாறு தெரியாமல் பேசக் கூடாது: ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி எதிர்ப்பு

அமைச்சர் எஸ்.ரகுபதி | கோப்புப் படம்

சென்னை: ராமேசுவரம் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவர் தினத்தையொட்டி, சுற்றுலா மாளிகையில் திருவள்ளுவர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். அப்படத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்தார்.

இந்தச்சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ட்விட்டர் பதிவில் சனாதனம் குறித்த கருத்துக்கு பதிலளித்து சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநரின் வாடிக்கை. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து, பின்னர் தமிழர்களுடைய எதிர்ப்புகளுக்குத் தலைபணிந்து, ‘இது தமிழ்நாடு தான்’ என்று ஒப்புக்கொண்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுவந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் ஆளுநர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் பக்கம் இன்று திரும்பியிருக்கிறார். அவர் கூறும் பாரம்பரியம், ஈராயிரம் ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கிய பாரம்பரியம் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப்போல உருட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர், உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம். அதற்குக் காலதாமதமாகும் என்றால் திருவள்ளுவர் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து, அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x