Last Updated : 17 Jan, 2024 06:04 AM

 

Published : 17 Jan 2024 06:04 AM
Last Updated : 17 Jan 2024 06:04 AM

அவனியாபுரத்தில் அமர்க்களமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு: 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு காரை பரிசாக வழங்கிய அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன். உடன் மதுரை ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர். படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இப் போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா,மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் காலை 7 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு435 மாடுபிடி வீரர்களும் 817 காளைகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தன. 10 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் 9 சுற்றுகளில் குறைந்தது 5 காளைகளைப் பிடித்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் அனுமதிக் கப்பட்டனர்.

வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்து அடக்கி பரிசுகளைக் குவித்தனர். பல காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சவால்விடுக்கும் வகையில் பிடிகொடுக்காமலும், களத்தை விட்டுப் போகாமலும் களத்தில் நின்று சுழன்றியபடி ஆடி பரிசுகளை வென்றன.

சிறந்த காளை, மாடுபிடி வீரர்: மாலை 5 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய பசு மாடு பரிசாக வழங் கப்பட்டது.

சிறப்பாக களத்தில் நின்று விளையாடிய காளைகளில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மறைந்த தலைவர் ஜி.ஆர்.கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை முதல் பரிசு பெற்றது. இக்காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் மற்றும் மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடியகறவை பசு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் மற்றும் இரண்டாம்இடம் பிடித்த திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சீனிவேலின் காளைக்கு பீரோ மற்றும் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த மாடு பிடி வீரர்கள் மற்றும்சிறந்த காளைகளுக்கான பரிசுகள்மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரர்கார்த்தி கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிமுதல் பரிசு பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.ஐபிஎல் போட்டிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்படுவதில்லை’’ என்றார்.

51 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுகள் குத்தியதில் 2 போலீஸார் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உட்பட 51 பேர் காயமடைந்தனர். இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x