

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வார விடுப்பு வழங்காமல், தொடர்ந்து தொடர்ந்து 36 மணி நேரம் பணியாற்ற அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் கடும்மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பணிஅழுத்தம் காரணமாக முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சிலர் சமீபத்தில் உயிரிழந்ததால் இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.
இது தொடர்பான ஆய்வை தமிழ்நாடு மருத்துவ அலுவர்கள் சங்கம் முன்னெடுத்தது. சென்னைமருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மருத்துவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டன.
தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் தங்களது குறைகளையும், பிரச்சினைகளை தெரிவித்தனர். தொடர் பணி மற்றும்நிர்வாகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டினர்.
மருத்துவ மாணவர்களின் குறைகளையும், ஆய்வு முடிவுகளையும் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணிடம் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க நிர்வாகிகள் சமர்ப்பித்துள்ளனர்.
விசாரணை நடத்துவதாக சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களை அழைத்து குறைகளை டீன்கள் கேட்டறிந்து வருகின்றனர்.