Published : 17 Jan 2024 06:20 AM
Last Updated : 17 Jan 2024 06:20 AM

ரூ.400 கோடி மதிப்பில் பெரும்பாக்கத்தில் காவலர்களுக்கு குடியிருப்புகள்: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் தகவல்

தாம்பரம் காவல் ஆணையரகம், பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை காவலர் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். உடன், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்டோர். படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால், 6 ஏக்கர் நிலத்தில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் பெரும்பாக்கத்தில் காவலர்களுக்கு வீடுகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தாம்பரம் அருகேமாடம்பாக்கம் - பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் காவல் அதிகாரிகள், காவலர்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவரது மனைவியுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்.

விழாவில் காவலர்கள் பங்கு கொண்ட உறியடி, கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, லெமன் இன் த ஸ்பூன், மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அவரது மனைவி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பேசியதாவது: காவல்துறை பணி சிரமமான பணி. இந்த பணியை காவலர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் அதிக சிரமத்துடன் பணிகளை செய்து வருகிறார்கள்.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொங்கல் விழாவை காவல்துறை சார்பில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு அனைத்து பகுதிகளிலும் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியோடு பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காவல்துறையை பொறுத்தவரை காவலர் நலன்கள் குறித்த மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

காவலர்களுக்கு வீடு முக்கியமானது. அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பாக நடவடிக்கை எடுத்து பெரும்பாக்கத்தில் ஆறு ஏக்கர் நிலம் அரசு மூலம் பெற்று அந்த பகுதியில் ரூ.800 கோடியில் 400 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதேபோல காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு காப்பீடுகள் உள்ளன. இருந்த போதிலும் அந்த மருத்துவ காப்பீடுகளை பெறும்போது காலதாமதம் மற்றும் காப்பீடாக குறைந்த தொகை வருவதாக வந்த தகவலை அடுத்து அவற்றை சரி செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்து இருக்கிறது. இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.15 கோடியாக அந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அது 8 லட்சமாக உயர்த்தி தரப்பட உள்ளது. காவலர்கள் மகிழ்ச்சியோடு தங்கள் பணிகளை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில் 9 காவல் நிலையங்கள் உள்ளன. பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் அலுவலகம் இல்லாததால் தற்காலிகமாக கானத்தூர் காவல் நிலையத்தில் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் மேலைக்கோட்டையூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிக்கரணை மாவட்ட காவல் துணை ஆணையர் அலுவலகத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையர்அமல்ராஜ் திறந்து வைத்தார்.

காணும் பொங்கலை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் 1,200 போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும், கிழக்கு கடற்கரை சாலை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீச்சல் தெரியாதவர்கள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், கடற்கரையில் பாதுகாப்பாககாணும் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x