

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ரேக்ளா குதிரை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முதல், கூர்ம விலாசபுரம், காரணி நிசாம்பட்டு உள்ளிட்ட பகுதிகள் வரை, சிறிய குதிரைகள், நடுத்தர குதிரைகள், பெரிய குதிரைகள் என 3 வகையான குதிரைகளுக்கு 3 பிரிவுகளின் கீழ் 12 கிமீ 14 கிமீ, 16 கிமீ தொலைவுக்கு பந்தயம் நடைபெற்றது. இதில், பல்லாவரம், சென்னை, ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 55 குதிரைகள் பங்கேற்றன.
திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகாலிங்கம் ஏற்பாட்டில் நடந்த இந்த பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த குதிரைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருத்தணி எம்எல்ஏவுமான எஸ்.சந்திரன் வழங்கினார்.