“காரை வைத்து என்ன செய்வது?” - ஜல்லிக்கட்டில் 2-வது முறையாக முதல் பரிசு வென்ற மாணவர் கார்த்திக்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: “கார் எங்களுக்கான பரிசு கிடையாது. அரசு வேலை கொடுத்தால் எப்படியாவது பிழைத்துக் கொள்வோம்” என்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2-வது முறையாக கார் பரிசு பெற்ற கல்லூரி மாணவர் கார்த்திக், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த ஆண்டு அவனியாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் அதிக எண்ணிக்கையிலான காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு பெற்றார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கார் பரிசு வழங்கப்பட்டது. கார்த்திக் ஏற்கெனவே, 2020-ம் ஆண்டு 24 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்றார். அதுபோல், 2021-ம் ஆண்டில் இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரராக பரிசு பெற்றுள்ளார். அப்போது 18 காளைகள் அடக்கினார்.

2022-ம் ஆண்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு பெற்றார். 24 காளைகள் அடக்கினார். 2023-ம் ஆண்டு இரண்டாவது சிறந்த மாடுபிடி வீரராக வந்து, பைக்கை பரிசாக பெற்றார். அந்த போட்டியில் 17 காளைகள் அடக்கினார். இந்நிலையில், தற்போது இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி கார் பரிசு பெற்றுள்ளார்.

இது தொடர்பாக கார்த்திக் கூறுகையில், “என்னுடைய பெற்றோர் கூலி வேலை பார்க்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு வேலை பார்த்து என்னை படிக்க வைக்கிறார்கள். எனக்கு வயது 21. கல்லூரியில் இந்த ஆண்டு பிஎஸ்சி உடல் கல்வி படிப்பு படித்துள்ளேன். தொடர்ந்து அதிக காளைகளை அடக்கி வருகிறேன்.

ஒவ்வொரு முறையும் பரிசு பெறும்போது என்னை போன்ற மாடுபிடி வீரர்களுக்கு மற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வழங்குவது போல் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தற்போது வரை தமிழக அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கவில்லை. இந்த முறையும் கார் பரிசு பெற்றுள்ளேன். காரை வைத்து நாங்கள் என்ன செய்வது? கடந்த முறை வாங்கிய காரை விற்றுவிட்டேன். அதனால், கார் எங்களுக்கான பரிசு கிடையாது. அரசு வேலை கொடுத்தால் எப்படியாவது பிழைத்துக் கொள்வோம்” என்றார்.

இதனிடையே, பாலமேடு ஜல்லிட்டுப் போட்டியிலும் முதல் பரிசு வென்ற பிரபாகரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதன் விவரம்: “கார் பரிசு வேண்டாம், அரசு வேலை வேண்டும்” - பாலமேடு ஜல்லிக்கட்டு சிறந்த வீரர் பிரபாகரன் உருக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in