

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் காளை மாடுகளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்டனர். மேலும், உயர் நீதிமன்றம் அறிவுரைப்படி, இந்த ஆண்டு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும்போது சமுதாய பெயர் சொல்வது தவிர்க்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். ஆண்களுக்கான விளையாட்டாகவே இந்தப் போட்டி பார்க்கப்பட்டது. பார்வையாளர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர். சமீப காலமாக, பார்வையாளர்கள் மட்டுமல்லாது காளைகளை அவிழ்த்து விடும் மாடுபிடி வீரர்களாகவும் பெண்கள் அதிகளவு ஜல்லிக்கட்டு களத்துக்கு வர ஆரம்பித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள், குடும்ப பெண்கள் எல்லோரும் தற்போது மதுரை பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆண்கள் காளைகளை வளர்த்து வாடிவாசலில் அவிழ்த்தாலும் பெரும்பாலும், பெண்களே வீடுகளில் அந்த காளைகளை பராமரித்து வந்தார்கள். தற்போது அவர்கள் பராமரித்த அந்த காளைகளை அவர்களே வாடிவாசலுக்கு அழைத்து வந்து அவிழ்த்துவிடுகிறார்கள். இதனை அவர்கள் குடும்பத்தினர் உற்சாகப்படுத்துகிறார்கள். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மட்டும் இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட காளைகளை பெண்கள் வாடிவாசலில் அவிழ்த்துள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்:
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராயவயல் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் `சின்னக்கருப்பு' என்ற காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம் அடைந்தனர். > முழு விவரம்: சிறந்த காளை ‘சின்னக்கருப்பு’, சிறந்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு - பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 49 பேர் காயம்