Published : 16 Jan 2024 07:32 AM
Last Updated : 16 Jan 2024 07:32 AM
பாலமேடு: உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.16) காலை கோலாகலமாக தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
தை பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் நடைபெறுகிறது. பாலமேடு கிராம் பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன. இன்று காலை 7 மணியளவில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. அதன் பிறகு பாலமேட்டிலுள்ள பல்வேறு கோவில்களின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்தப் போட்டி குறைந்தபட்சம் 8 சுற்றுகளாக மாலை 4 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 50-லிருந்து 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்படுவர். இதுவரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாட 3677 காளைகளும் 1412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகள், 700 வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
முதல் பரிசு பெறும் மாட்டின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிக காளைகளைப் பிடித்து முதலிடம் பெறும் மாடு பிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
காயமடையும் வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பாக சிறப்பு முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இதற்காக வாடிவாசல் அருகே இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல்துறை சார்பாக 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாடிவாசல் அருகே களத்தில் வீரர்களும், காளைகளும் விளையாடுவதற்கு ஏதுவாக தேங்காய் நார்க் கழிவுகள் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஒன்றரை அடிக்கு கொட்டப்பட்டுள்ளன. மாடுகளின் கொம்புகளைப் பிடிப்பதோ, அவற்றின் கால்களைப் பின்னுவதோ கூடாது எனவும் மாடுகளின் திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் உள்ளன. மேலும் காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை வீரர் இறுகப் பற்றியிருந்தாலோ அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றாலோ மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயல்வது கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலமேட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டைக் கண்டு ரசிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து செல்லும் காளைகளை, உரிமையாளர்கள் சேகரிக்கும் இடம் வரை சவுக்குக் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்கேற்று காளைகளைப் பிடிக்கும் வீரருக்கும் பிடிபடாமல் செல்லும் காளையின் உரிமையாளருக்கும் அண்டா, தங்க நாணயம், மின்விசிறி, கேஸ் ஸ்டவ், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT