Published : 15 Jan 2024 05:32 AM
Last Updated : 15 Jan 2024 05:32 AM

பொங்கல் தின கொண்டாட்டம் உழவுத் தொழிலையும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் விழா: ஆளுநர்கள், முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லஷ்மி ரவி ஆகியோர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

சென்னை: உழவு தொழிலையும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் திருவிழா, பொங்கல் விழா என்று ஆளுநர்கள், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆளுநர் ஆர்.என்.ரவி: பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பவுஷ்பர்வ, லோரி ஆகிய தினங்களை கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகள். நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமதுவளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். பண்டிகைகள் நமக்கு வளத்தையும், மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழர் பண்பாட்டின் அடையாளமான பொங்கல் விழா,இயற்கையையும், உழவுத் தொழி லையும், தமிழரின் மாண்பையும் பெருமைபடுத்தும் திருவிழாவாகும். உலகதமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பொங்கல் திருநாளில் மனநிறைவு பொங்கட்டும். அனைவரது வாழ்விலும் போர்க்களம் போய் பொற்காலம் தொடங்கட்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: தாய் தமிழக மக்கள் எல்லோருக்கும் என் இனிய தமிழர் திருநாள் – பொங்கல் நல் வாழ்த்துகள். உழவு என்பது தமிழர்களின் தொழிலாக மட்டும் அல்ல பண்பாட்டு மரபு. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக – தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறோம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தைத்திருநாளில் தடைகள் தகரும். நிலைகள் உயரும். நினைவுகள் நிஜமாகும். பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப தமிழகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழர் திருநாள், திராவிடர் திருநாள், பொங்கல் திருநாள் என்று தமிழ் மக்களால் விழா எடுத்துக் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் அனைவருக்கும் இனிக்கும் பொங்கலை வழங்கி வாழ்த்துங்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழவும், அனைவரது துயரங்கள் தீரவும், நாட்டில் மகிழ்ச்சி செழிக்கவும் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நாகரீக வளர்ச்சியிலும் மற்ற கலாச்சாரத்தை தம்முடன் இணைத்துக் கொண்டு பொங்கல் பண்டிகை மேன்மேலும் சிறப்புப் பெற்று வருகிறது. தமிழர்களின் நன்றி மறவாமை பண்பை உலகுக்கு பறைசாற்றுகிறது.

தி.க. தலைவர் கி.வீரமணி: திராவிடர் திருநாளாக உழைப்பின் பெருமிதத்தை உலகுக்கு உணர்த்திடும் இப்பொங்கல் திருநாளில் அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதியை காக்கும் புத்துணர்ச்சி, புதுவெள்ளமாய் பொங்கட்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: உழைப்பையும் உறவையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டு காலம்காலமாகக் கொண்டாடப்பட்டு வரும்ஒரே உன்னத திருவிழா, பொங்கல் விழா. தமிழர்கள் யாவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: இளம் தலைமுறையினருக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், கலாச்சார பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இயற்கையை வாழ்த்தும் நாள்,உழைப்பில் உதவும் சக உயிர்களுக்குநன்றி சொல்லும் நாள். சாதி, மத,பேதமின்றி தைப்பொங்கலில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத சக்திகளை நிராகரித்து, ஜனநாயகம் பேணும் சக்திகளை அதிகாரத்தில் அமர்த்திடும் உறுதியோடுஅனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சாதி மத வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து உழைப்பின் உன்னதத்தை உயர்த்திப் பிடிக்கிற பொங்கல் திருநாளில் மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்திட உறுதியேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தெய்வீகத்தை, உழைப்பை, விவசாயத்தை, அன்பை வெளிப்படுத்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

விஜய் வசந்த் எம்.பி.: தைத்திருநாள், நமது நாட்டில் புதிய மாற்றங்களுக்கான வழிகளை திறந்து கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த நாளை கொண்டாடுவோம்.

இவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமகதலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தவாக தலைவர்தி.வேல்முருகன், சமக தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து,சு.திருநாவுக்கரசர் எம்.பி., கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், காமராஜர் மக்கள்கட்சி தலைவர் தமிழருவி மணியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x