Published : 15 Jan 2024 05:13 AM
Last Updated : 15 Jan 2024 05:13 AM
சென்னை: போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமற்றும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல்நாளான நேற்று போகி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக, வீடுகளை சுத்தம் செய்த மக்கள், தேவையற்ற மரப்பொருட்கள், பாய், தேவையற்ற துணிமணிகள் மற்றும் பழைய பொருட்களை வீட்டு வாசலில் குவித்து, தீவைத்து கொளுத்தினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் பழைய பொருட்களை மக்கள் கொளுத்தியதால் கடும் புகைமூட்டம் எழுந்தது. எதிரே வாகனங்கள் வருவதுகூட தெரியாத அளவுக்கு சாலைகளில் புகைமூட்டம் இருந்ததால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
புகை மற்றும் பனி மூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையே தெரியாத நிலை ஏற்பட்டது. சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லியில் இருந்து வந்த 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
மஸ்கட், துபாய், குவைத், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 20 விமானங்களின் வருகை மற்றும் துபாய், மஸ்கட், குவைத், சிங்கப்பூர், லண்டன், மும்பை, டெல்லி, அந்தமான், தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட 24 விமானங்களின் புறப்பாடு தாமதமானது.
ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள், நிலைமை சீரான பிறகு சென்னையில் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT