Published : 15 Jan 2024 06:26 AM
Last Updated : 15 Jan 2024 06:26 AM

10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்: தமிழகத்தில் களைகட்டிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

சென்னை எழும்பூரில் ரயிலில் ஏற முண்டியடித்த கூட்டம்.(கோப்புப்படம்)

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி முதல் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தொலைதூரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 12, 13 தேதிகளில் 7,670 அரசு பேருந்துகளில் 4 லட்சத்து44,860 பேர் பயணித்துள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, தாமதமாகவே சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்க கூடுதல் நேரம் ஆனது. பேருந்துகளை சென்னைக்கு அடுத்த நடைக்கு கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுதவிர திருச்சி பொன்மலை ரயில்வே மேம்பாலம் விரிசல் கண்டதால் பேருந்துகள் மாற்று பாதையில் இயங்கியதும் காலதாமதத்துக்கு காரணமானது. இதனால் சென்னையிலிருந்து சென்ற பயணிகள்அவதிக்கு ஆளாகினர்.

அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகங்களின் 4,446 பேருந்துகள் நேற்று முன்தினம் ஒரேநாளில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. ஒரேநாளில் அதிகபட்சம் இவ்வளவு பேருந்துகள் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. நாளொன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் பேர் வரை பயணிப்பார்கள்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு கடந்த 12, 13 தேதிகளில் மட்டும் 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்று முன்தினம் (ஜன.13) தங்கள் ஊர்களுக்கு செல்ல இருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களும் நேற்று பரபரப்புடன் காணப்பட்டன. நேற்றும் காலை முதலே ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், வந்தே பாரத் சிறப்பு ரயில், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முன்பதிவில்லாத ரயில் உட்பட பெரும்பாலான ரயில்கள் நிரம்பி வழிந்தன.

கடந்த 3 நாட்களில் அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் வாயிலாக 6 லட்சம் பேர், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலமாக 4 லட்சம் பேர் என பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சுமார் 10 லட்சம் பேர் சென்னையில் இருந்து உற்சாகமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதனிடையே நேற்றும் சென்னை, புறநகர், கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, மதுரை உள்ள பல்வேறு நகரங்களில் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று புத்தாடைகளை வாங்கினர்.

குழந்தைகளில் பெரும்பாலானோர் வேட்டி - சட்டைகளை வாங்கினர். நேற்று பெரும்பாலான துணிக் கடைகளில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x