

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் பருவமழை தலைதூக்கியதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டிவிட, 8 அடி உள்ள நிலையில் காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடுவது குறைக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இரண்டு நாட்களுக்கு முன்பு விநாடிக்கு 11 ஆயிரத்து 119 கன அடியாக குறைந்தது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்வதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை நீர்வரத்து விநாடிக்கு 17,139 கன அடியாக இருந்தது. சனிக்கிழமை காலை 19 ஆயிரத்து 363 கன அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம், சனிக்கிழமை காலை நிலவரப்படி 112.21 அடியாக இருந்தது. அணைக்கு 19,363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்பு அதிகரித்துள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 500 கன அடி தண்ணீர் என மொத்தம் 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக வரத் தொடங்கி, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஒகேனக்கல்லில் அருவி, ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.