Published : 15 Jan 2024 06:15 AM
Last Updated : 15 Jan 2024 06:15 AM

பொங்கல் தொகுப்பில் மீதமாகும் கரும்புக்கு பணம் கட்ட சொல்வதா? - உத்தரவை திரும்ப பெற ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: பொங்கல் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றதுபோக மீதமாகும் கரும்பு ஒன்றை ரூ.24 வீதம் விற்று பணத்தை கட்ட வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறும்படி அதிகாரிகளுக்கு ரேசன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் என 2.19 கோடிக்கும் மேலானவர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டன. கடந்த ஜன.10-ம் தேதி இந்தப் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் பணி நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. வழக்கமாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதுபோக மீதமுள்ள ரொக்கப் பணம், கரும்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிடுவது வழக்கம்.

ஆனால், இம்முறை பணத்தை மட்டும் ஒப்படைத்துவிட்டு, கரும்பை தலா ரூ.24 வீதம் விற்பனை செய்து அதற்கான தொகையை ரேசன் கடை ஊழியர்கள் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், ரேசன் கடை ஊழியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தினேஷ்குமார் கூறும்போது, ‘‘பொங்கல் பரிசு தொகுப்பு முடிவடையும் நிலையில், மீதமுள்ள கரும்புக்கு பணம் செலுத்த ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதை தயவு செய்து கைவிட வேண்டும்.

பணப்பயனின்றி மனஉளைச்சலில் மக்களுக்கு பணியாற்றி வருகிறோம். இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் செய்ய வேண்டும். கருப்பு பொங்கலாக மாற்றிவிடாதீர்கள். மீதமுள்ள கரும்புக்கு இன்று பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x