Published : 15 Jan 2024 04:02 AM
Last Updated : 15 Jan 2024 04:02 AM

சிறுநீர் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்த விவகாரம்: திருச்சி தேசிய சட்டப் பல்கலை. மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் 22 வயது மாணவருக்கு, சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர் பானத்தை ஏமாற்றி குடிக்க வைத்த விவகாரத்தில், 2 மாணவர்களை விசாரணை முடியும் வரை இடை நீக்கம் செய்து பல்கலைக் கழகத் துணை வேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

உண்டு உறைவிட வசதியுடன் கூடிய இப்பல்கலைக் கழகத்தில் 600-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் சட்டம் படித்து வருகின்றனர். இங்கு ஜன.6-ம் தேதி நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் இறுதியாண்டு பயிலும் 2 மாணவர்கள், சக மாணவர் ஒருவருக்கு குளிர் பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர், சட்டப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வி.நாகராஜ், பதிவாளர் பால கிருஷ்ணன் ஆகியோரிடம் ஜன.10-ம் தேதி புகார் அளித்தார்.

இதையடுத்து, ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் உதவிப் பேராசிரியர்கள் 3 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மேலும், இந்த விசாரணை முடியும் வரை குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 மாணவர்களையும் இடை நீக்கம் செய்து துணை வேந்தர் வி.நாகராஜ் உத்தரவிட்டுள்ளார். ஜன.11, 12, 13 ஆகிய 3 நாட்கள் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர், மேலும் சாட்சிகளாக 7 மாணவர்கள் ஆகியோரிடம் விசாரணைக் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணை அறிக்கை ஜன.18-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவர், தனது புகாரை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், திரும்பப் பெற முடியாது. விசாரணைக் குழுவின் அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாணவரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது: பாதிக்கப்பட்ட மாணவர், தனது நண்பர்கள் தன்னை ‘பிராங்க்’ செய்வதற்காக இப்படி செய்து விட்டதாகக் கூறி, புகாரை வாபஸ் பெறுவதாகக் கூறினார். ஆனால், ராகிங்தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால் திரும்பப் பெற முடியாது.நண்பர்களுக்குள் விளையாட்டுத்தனம் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற விஷமத்தனம் இருக்கக்கூடாது. அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற அநாகரிகமான செயலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. எனவே, விசாரணை அறிக்கை வந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x