Published : 14 Jan 2024 03:39 PM
Last Updated : 14 Jan 2024 03:39 PM

கோவை | நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் - சீமான் கண்டனம்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் தமிழகத்தில் பாஜக வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா?" என்று கோவையில் நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று (ஜன.13) இரவு நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச் சார்ந்த பாஜகவினர் சிலர், தம்பிகள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

சாதி, மதங்களைக் கடந்து தமிழிளந் தலைமுறை பிள்ளைகள் தமிழர்களாக ஒன்றுபட்டு பெருமளவில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததே பாஜகவினர் செய்துள்ள இக்கோழைத்தனமான கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும். தமிழர் ஓர்மையைச் சீர்குலைத்து, மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபமடையத் துடிக்கும் பாஜகவின் இழிவானச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் தமிழகத்தில் பாஜக வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? உண்மையில் இந்துத்துவ அமைப்புகளுக்கு திமுக அரசு தரும் மறைமுக ஆதரவே மாற்றுக்கட்சியினரைத் தாக்கும் அளவுக்கு தமிழகத்தில் பாஜக வளர முக்கியக் காரணமாகும்.

ஆகவே, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினரை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புத்தம்பிகள் இருவரும் விரைந்து நலம்பெற விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x