Published : 14 Jan 2024 06:47 AM
Last Updated : 14 Jan 2024 06:47 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் நேற்று 2-ம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.
திருநெல்வேலியில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் அதிகனமழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. கடந்த மாதம் 21-ம் தேதி மத்தியக் குழுவினர் முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டு, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், தேசிய பேரிடர்மேலாண்மை ஆணைய ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையிலான 7 பேர் இரண்டாம் கட்ட ஆய்வுக்காக திருநெல்வேலிக்கு நேற்று வந்தனர்.
மழை பாதிப்புகள், சீரமைப்புப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பல்வேறு விளக்கங்களை அளித்தார். தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ்மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்தியக் குழுவினர் இரு குழுக்களாக சென்று பார்வையிட்டனர். பின்னர் மத்தியக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு மழை, வெள்ளப் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது" என்றனர்.
தொடர்ந்து, சீவலப்பேரி பகுதியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளையும், பயிர் சேதங்கள் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT