

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை சன்னதி தெருவில் இந்து மக்கள் கட்சியின் இந்து தர்ம சேனா அமைப்பு சார்பில் சனாதனம் போற்றும் கலாச்சார பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி தலைமை வகித்தார். இதில், திமுக எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநகர மேயர் சரவணன், பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திமுக எம்எல்ஏ, சனாதனத்தைப் போற்றும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்து தர்ம சேவா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.குருமூர்த்தி கூறும்போது, ‘‘கும்பகோணத்தில் 13 ஆண்டுகளாக நாங்கள் நடத்தி வரும் பொங்கல் விழாவில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில், உள்ளூர் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டார். அவர்ஒவ்வோர் ஆண்டும் இந்த விழாவில் பங்கேற்பது வழக்கம். மேலும், அதிமுக, பாஜகநிர்வாகிகளும் கலந்து கொண்டனர்’’ என்றார்.