

மதுரை: பொய் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூத்தங்குளியைச் சேர்ந்த அன்றன் சேவியர் வினிஸ்டர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
குண்டர் சட்டத்தில்... என் வீட்டின் அருகே 2021 ஜூலையில் அபினேஷ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், போலீஸார் என்னை குற்றவாளியாக சேர்த்து, கைது செய்தனர். மற்றொரு வழக்கிலும் போலீஸார் என்னை கைது செய்தனர். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
எந்த குற்றத்திலும் ஈடுபடாத என்னை காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மற்றும் காவலர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏறத்தாழ 7 மாதங்கள் சிறையில் இருந்த நான், பின்னர் விடுதலையானேன்.
இந்த வழக்கின் ஆவணங்களை நீதிமன்றத்தில் பார்வையிட்டபோது, என் மீது பொய் வழக்கு பதிவு செய்தது தெரியவந்தது. இதனால் வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தேன். விசாரணையின்போது, என்மீது புகார் அளித்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் புகார் அளிக்கவில்லை என்று கூறினார். இதனால் என் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
7 மாதங்கள் சிறையில்: இதையடுத்து, என் மீது பொய்வழக்கு பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கைது செய்து, 7 மாதங்கள் சிறையில் அடைத்த கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம், காவலர் இசக்கியப்பன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, ராதாபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதிபெற வேண்டும் என்று கூறி, அந்தமனுவை என்னிடமே திருப்பி வழங்கிவிட்டனர். இதை ரத்துசெய்து, காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி நாகர்ஜுனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி தனது உத்தரவில், "காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் ராதாபுரம் நீதிமன்றத்தில் 2 வாரங்களுக்குள் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை விசாரணைக்கு எடுப்பது குறித்து கீழமை நீதிமன்றமே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.