

மதுரை: கலப்புத் திருமணம் செய்வோரை கொலை செய்வதாக மிரட்டல் வீடியோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிலர்,யாரேனும் கலப்புத் திருமணம் செய்தால் கொலை செய்வோம் என்று கொலை மிரட்டல் விடுத்து,சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு வீடியோ வெளியிடுவோர் மீது, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் மீது புகார் அளித்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், புகார் அளித்தவர்கள் தாக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு டிஜிபி, தென் மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சக்தி சுகுமாரகுரூப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும்போது, "சாதிசங்கம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்கின்றனர். மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், சாதி மறுப்புத் திருமணம் செய்தால் கொலை செய்வதாக மிரட்டி யூடியூப் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்கின்றனர்" என்றார்.
இதையடுத்து நீதிபதி, "மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி, அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.