

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒருவர் வீட்டின் செப்டிக் டேங்க்-ஐ சுத்தம் செய்ய முற்பட்டபோது, விஷவாயு தாக்கியதில் நகராட்சி தூய்மைப் பணியாளர் சேவுகப்பெருமாள் உயிர்இழந்தார்.
இந்நிலையில், காரைக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு நேற்றுவந்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன், உயிரிழந்த சேவுகப்பெருமாள் மனைவி மாரியம்மாள், அவரது 2 மகள்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.15 லட்சம் வழங்கினார்.
பின்னர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களை மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. பாதாள சாக்கடைத் திட்டத்தில் ரோபோ இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர், இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 227 மலக்குழி மரணங்கள் நேரிட்டுள்ளன. இவற்றில் அதிக மரணங்கள் தமிழகத்தில்தான் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.