Published : 14 Jan 2024 04:00 AM
Last Updated : 14 Jan 2024 04:00 AM

இபிஎஸ் பங்கேற்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா: தண்டையார் பேட்டையில் கூட்டம் நடத்த அனுமதி

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகஆர்.கே.நகர் தொகுதியின் மேற்கு பகுதி செயலாளர் நித்தியானந்தம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு ஜன.19-ம் தேதி ஆர்.கே. நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

காவல்துறை அனுமதி மறுப்பு: இதற்கு அனுமதி கோரி கடந்த 9-ம் தேதி ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளரிடம் அளித்த மனுவை அரசியல் காரணங்களுக்காக நிராகரித்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் கூட்டம் நடத்தப்படும் நிலையில்,இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் திலகர் நகர் அருகில் இடத்தை தேர்ந் தெடுத்து அனுமதி வழங்க கோரி அளித்த மனுவையும் நிராகரித்துள்ளனர். எனவே, அதிமுக கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

வழக்கு முடித்துவைப்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி‘‘ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது’’ என்றார். காவல் துறை தரப்பில்,‘‘சுண்ணாம்பு கால்வாய் பகுதி மற்றும் திலகர் நகரில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, தண்டையார்பேட்டையில் பொதுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கும் படி காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x