Published : 14 Jan 2024 04:00 AM
Last Updated : 14 Jan 2024 04:00 AM

ஜன.16-ல் நந்தம்பாக்கத்தில் பன்னாட்டு புத்தகக் காட்சி: தமிழில் மொழி பெயர்த்த 200 புத்தகங்கள் வெளியாகிறது

சென்னை: தமிழக அரசின் பன்னாட்டு புத்தகக் காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதில் மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.

ஜெர்மனியின் ‘பிராங்பர்ட்’ சர்வதேச புத்தகக் காட்சி 1949-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அதேபோல், தமிழகத்திலும் பன்னாட்டு புத்தகக் காட்சியை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி கடந்த ஆண்டு, பபாசியின் சென்னை புத்தகக் காட்சியுடன் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நடப்பு ஆண்டு 2-வது பன்னாட்டு புத்தகக் காட்சி ரூ.6 கோடி செலவில் சென்னை நந்தம் பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் ஜன.16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு,தொடக்க காலம் முதல் தற்போதைய செயற்கை நுண்ணறிவு வரை எழுத்துகள் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளன என்பது மையப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காட்சியில் 30 நாடுகள் வரை பங்கேற்றன. அதில் 120 நூல்களை வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவற்றில் 52 நூல்கள் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டுள்ளன. நடப்பு ஆண்டு பன்னாட்டு புத்தகக் காட்சியில் 39 நாடுகள் பங்கேற்க உள்ளன. இது தவிர நமது நாட்டில் இருந்து 10 மாநிலங்களும் கலந்து கொள்கின்றன.

இதன் மூலமாக 50 மொழிகளை சேர்ந்த புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் கருத்தரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், குழு விவாதங்கள் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறும். மேலும், மாலையில் இந்தியா மற்றும் மலேசியாவின் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இத்தகைய புத்தகக் காட்சிகள்மூலமாக தமிழ் படைப்புகள் உலகளவில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல, இந்த ஆண்டு புதிய முயற்சியாக 20 இலக்கிய முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்எழுத்தாளர்கள் மற்றும் வெளிநாட்டு பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருப்பார்கள். மேலும், புத்தகக் காட்சியின் நிறைவு நாளில் மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 200 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன. இவ்வாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x