போலீஸார் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட்டம்: காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பங்கேற்பு

படம்: ம.பிரபு
படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: பாரம்பரிய உடையில் போலீஸார் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த விழாவில் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்றார்.

சென்னை மத்திய குற்றப் பிரிவு சார்பில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத் தில் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. விழாவில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மனைவி ஷில்பம் கபூருடன் கலந்து கொண்டு, பொங்கல் வைத்தார். விழாவையொட்டி ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சந்தீப் ராய் ரத்தோர் பரிசுகளை வழங்கினார். இதையடுத்து, எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் ஆயுதப் படை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.

அந்த விழாவிலும், மனைவியுடன் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டார். காவல் துறை சார்பில் நடத் தப்பட்ட பொங்கல் விழாவில், கிராமிய கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்த கோயில், நாற்று நடுதல், மண்பானை செய்தல், பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற குடில்கள், கிளி ஜோசியம், கரும்பு விற்பனை கடைகள், மாட்டு தொழுவம் ஆகிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை காவல் ஆணையர் பார்வையிட்டார்.

ராஜ ரத்தினம் மைதானத்தில் போலீஸார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ரங்கோலி, கயிறு இழுத்தல், உறியடித்தல், லக்கி கார்னர், நடனப் போட்டி, சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம்,சாக்கு ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. பரத நாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம், குழந்தைகள் நடனம், பறை இசை ஆகிய கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை காவல் ஆணையர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஏராளமான போலீஸார் தங்கள் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர். கூடுதல் ஆணையர்கள் ஆர்.சுதாகர், கபில் குமார் சி சரட்கர், பி.கே.செந்தில் குமாரி, துணை ஆணையர்கள் எஸ்.ஆரோக்கியம், கீதாஞ்சலி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in