Last Updated : 14 Jan, 2024 04:12 AM

 

Published : 14 Jan 2024 04:12 AM
Last Updated : 14 Jan 2024 04:12 AM

கொசஸ்தலை ஆற்றில் கலப்பதற்கு முன்பாக மழைநீரை சேமிக்க மலை அடிவாரத்தில் அணை - பள்ளிப்பட்டு மக்கள் கோரிக்கை

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே கொல்லாலகுப்பம் கிராமத்தில், 4 மலைகளில் இருந்து வரும் மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதற்கு முன்பாக மலைகளின் அடிவாரத்தில் அணை கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ளது கொல்லாலகுப்பம் ஊராட்சி. ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட கொல்லாலகுப்பம் கிராமத்தில் இயற்கை எழிலுடன் உள்ள 4 மலைகளில் இருந்து வரும் மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. இந்த நீரை சேமிக்க மலைகளின் அடிவாரத்தில் அணை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து, கொல்லாலகுப்பத்தைச் சேர்ந்த தேவன் தெரிவித்ததாவது: கொல்லாலகுப்பம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில், மூனுகுப்பை, கபடா பாறை ( வவ்வால் பாறை ), போட பாறை ( சாரை பாறை ), சின்னக்கால் தொன்னை ஆகிய 4 மலைகள் உள்ளன. இந்த மலைகளில் வடகிழக்கு பருவ மழையின் போது பெய்யும் மழைநீர், மழைக் காலம் முடிந்த பிறகும் சுமார் ஒரு மாதம் வரை, ஓடை வழியாக 8 கி.மீ., தூரத்தில் உள்ள ஆந்திர மாநிலம் - நகரி பகுதியில் பாயும் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது. 4 மலைகளின் அடிவாரத்தில் கடந்த 1980-ம்ஆண்டு அமைக்கப்பட்ட குப்பிரெட்டி குளம் சில ஆண்டுகளிலேயே உடைப்பு ஏற்பட்டதால் வீணானது.

கொல்லாலகுப்பம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில், பருவ மழை பெய்த பிறகு ஓரிரு மாதங்கள் வரை, கிணறுகள் மற்றும் போர் வெல்களில் சுமார் 25 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். அதன் பிறகு, நிலத்தடி நீர் வறண்டு விடும். இதனால், கிணறுகளில் 80 அடி ஆழத்துக்கும், போர்வெல்களில் 700 அடி ஆழத்துக்கும் நீர் சென்று விடும். எனவே, கொல்லாலகுப்பம், சின்னமூடிபள்ளி, சி.என். கண்டிகை ஆகிய கொல்லால குப்பம் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தேவையான குடிநீரை 5 கி.மீ., தூரத்தில் உள்ள கரிம்பேடு - கொசஸ்தலை ஆற்றுக் கரையில் இருந்து பெறும் நிலை உள்ளது.

தேவன்

மேலும், கொல்லால குப்பம் ஊராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டு வந்த விவசாயம், தற்போது 10 சதவீதம் கூட செய்யப்பட வில்லை. ஆகவே, இந்த ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்தோர், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கான வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், 15 விவசாய குடும்பங்கள், சென்னை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டன. வறட்சி தொடர்ந்த வண்ணம் இருந்தால், கிராமத்தையே காலி செய்யும் அபாயம் ஏற்படும்.

கொல்லாலகுப்பம் மலைகளில் இருந்து வரும் மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதற்கு முன்பாக, அதனை சேமித்து, குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் 4 மலைகளின் அடிவாரத்தில் அணை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் பலனில்லை. இனியாவது, மலைகளில் இருந்து வரும் மழைநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தடுப்பணை அமைக்கப்பட்டால், கொல்லாலகுப்பம் மற்றும் டி.டி.கண்டிகை, புண்ணியம் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும். அதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், கொல்லாலகுப்பம் பகுதியில், மலைகளின் அடிவாரத்தில் அணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனு மீது அரசு பரிசீலனை செய்து கொல்லால குப்பம் பகுதியில் அணை கட்ட உத்தரவிடும் என எதிர்ப்பார்க்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x