

வெள்ள நிவாரண நிதி: அமித் ஷாவிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்: வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 37,907 புள்ளி 21 கோடி ரூபாயை விரைவாக வழங்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு நேரில் வலியுறுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு டெல்லியில் சனிக்கிழமை சந்தித்தது. திமுக எம்பி டி.ஆர். பாலு தலைமையிலான இக்குழுவில் கே.ஜெயகுமார், வைகோ, கே.சுப்பராயன், எஸ்.வெங்கடேசன், டி.ரவிகுமார், நவாஸ்கனி, சின்னராஜ் உள்ளிட்ட எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர்.
அமித் ஷாவிடம் அவர்கள் வழங்கிய மனுவில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் தமிழகத்தில் பெய்த கனமழை பாதிப்புகளை தற்காலிகமாகவும் நிரந்தமாகவும் சரிசெய்ய மொத்தம் 37,907 புள்ளி 21 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குமாறு தமிழக அரசு, மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
துணை முதல்வர் பதவி சர்ச்சை - ஸ்டாலின் விளக்கம்: “திமுக இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் திமுகவினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்” என்று உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த சர்ச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “எல்லா அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அடைத்துவிட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலைய இடம்: சேகர்பாபு விளக்கம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்கின்ற பேருந்துகள் இன்னும் ஒரு வருட காலத்துக்கு இயக்கப்படும் என்றும், கோயம்பேடு பேருந்து நிலைய இடம் குறித்து சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதனிடையே, "2024ம் ஆண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் கார்கே?: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இண்டியா கூட்டணி சார்பில் இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியிடவில்லை. முன்னதாக, பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரை இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க வலியுறுத்திய நிலையில், அவர் மறுத்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணி தலைவர்களுக்கு கார்கே அழைப்பு: ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்க, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த யாத்திரை மணிப்பூரின் தவ்பால் நகரில் உள்ள தனியார் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா - சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் உ.பி.யில் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் உத்தராகண்ட், அசாம், சத்தீஸ்கர் மாநிலங்கள் மது, இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“சாஸ்திரப்படியே நடக்கிறது” - ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் சாஸ்திரப்படியே நடத்தப்படுவதாக கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறித்து இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, ராமர் கோயில் பற்றிய பரபரப்பு, திறப்பு விழாவான ஜனவரி 22 உடன் முடிந்து விடாமல், அதற்கு பின்பு தொடர்வதற்கான திட்டங்களை செய்ய சங் பரிவார் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 27-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை ராமர் கோயிலை பார்வையிட நாடு முழுவதும் இருந்து 44 சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் வரும் மக்களுக்கு அயோத்தியை சுற்றிகாட்டுவதற்கான ஏற்பாடுகளை சங் பரிவார் செய்கிறது.
மாடல் திவ்யா பகுஜா உடல் கால்வாயில் கண்டெடுப்பு: ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் திவ்யா பகுஜாவின் உடல் அங்குள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. பஞ்சாபில் உள்ள பக்ரா கால்வாயில் வீசப்பட்ட சடலம், அண்டை மாநிலமான ஹரியாணாவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஹவுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: செங்கடல் வணிகப் பாதையை பாதுகாப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஹவுதிகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல் நடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஹவுதிகளின் ராடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்கும் அமெரிக்க முயற்சியின் முக்கிய இலக்காக ராடார் தளங்கள் உள்ளன" என்று தெரிவித்தனர். தாக்குதல் குறித்த கூடுதல் விபரங்களை அவர்கள் தர மறுத்துவிட்டனர்.
ஸ்பெயின் எம்.பி. ஆன ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட பெண்!: ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக டவுன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கால்செரன் என்ற அந்தப் பெண்ணின் அரசியல் பிரவேசம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.