சிறந்த வகையில் தமிழ் தொண்டு ஆற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு திருவள்ளுவர் விருது

சிறந்த வகையில் தமிழ் தொண்டு ஆற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு திருவள்ளுவர் விருது
Updated on
1 min read

சென்னை: சிறப்பான வகையில் தமிழ்த் தொண்டு ஆற்றி வரும் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான அண்ணா, காமராசர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழுக்கும், தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றுவோருக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள், சிறப்புகளை அளித்து வருகிறது. அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்கு விழா எடுத்து ரூ.3 லட்சம் பரிசு வழங்கியும், உலகத் திருக்குறள் மாநாட்டைமாநில அளவில் 2 முறை நடத்திதமிழ்த் தொண்டாற்றி வரும் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.

அதேபோல, அண்ணாவின் முதன்மை தொண்டராக பாராட்டப்பட்ட பத்தமடை பரமசிவத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான உ.பலராமனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருதும், தமிழக அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் மற்றும் கேரளஅரசின் 10, 12-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம்பெறும் அளவுக்கு கவிதைகள் படைத்த கவிஞர் பழனி பாரதிக்குமகாகவி பாரதியார் விருதும், 92-வதுவயதிலும் அருந்தமிழ்ப் பணியாற்றிவரும் எழுச்சிக் கவிஞர் ம.முத்தரசுவுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும்வழங்கப்படுகின்றன.

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களை திரட்டிவரலாற்று நூல்களை எழுதியவரும், சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதும், தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிதாக கற்கும் வகையில் பாடல்களாக தந்த இரா.கருணாநிதிக்கு முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கப்படுகின்றன.

விருதுகள் பெறும் அனைவருக்கும் விருது தொகையாக தலா ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கப்பட்டு, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவார்கள். விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in