Published : 13 Jan 2024 08:45 AM
Last Updated : 13 Jan 2024 08:45 AM

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் வழங்கும் நகை, சிறுவணிக கடன்களின் உச்சவரம்பு உயர்வு

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் வழங்கும் நகைக்கடன், சம்பளக்கடன், சிறுவணிகக் கடன்களின் உச்சவரம்பை உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, கூட்டுறவு வங்கிகள், சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள், கூடுதல் பதிவாளர்கள், மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கான குறியீட்டை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் குறியீட்டை எய்துவதற்காக சில மத்திய கூட்டுறவு வங்கிகளின் கோரிக்கையை ஏற்று கடன்களின் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நகைக்கடன் வழங்குவதற்கான தற்போதைய உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பி செலுத்தும் காலமான 12 மாதங்களில் மாற்றம் இல்லை. சம்பளக்கடனை பொறுத்தவரை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்தும் காலம் 84 மாதங்களில் இருந்து 120 மாதங்களாக உயர்த்தப்படுகிறது. சிறுவணிகக் கடனைப் பொறுத்தவரை ரூ.50 ஆயிரத்தில் இருந்து உச்சவரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பி செலுத்தும் காலத்தில் மாற்றமில்லை.

மேலும், தனி நபர் பிணையத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கடன்களை பொறுத்தவரை ரூ.50 ஆயிரம் வரை ஒரு நபர் பிணையமும், ரூ.50,001 முதல் 1 லட்சம் வரை 2 நபர் பிணையமும் அளிக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுரைகளைப் பின்பற்றி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x