

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
சென்னை, பெங்களூரு போன்ற வெளியூர்களில் பணி, கல்வி நிமித்தமாக தங்கியிருப்போர் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் வரும் திங்கள்கிழமை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய சனி, ஞாயிறு மற்றும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பிந்தைய 2 நாட்கள் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை உள்ளது.
இதனால், நேற்று (வெள்ளி) முதலே சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணிக்கத் தொடங்கினர். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவுகளும் பெரும்பாலான பேருந்துகள், ரயில்களில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கமும் தொடங்கியது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று காலை முதலே மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் மற்றும் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனை, கோயம்பேடு, கிளாம்பாக்கம் ஆகிய நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டிருந்து. இவற்றில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 20 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கோயம்பேட்டில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் தலா 5, தாம்பரம் சானடோரியத்தில் ஒன்று என 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று சுமார் 1,600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றின் மூலம் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
அமைச்சர் ஆய்வு: பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு செல்லும் பேருந்துகளை இங்கிருந்தும் தேவைக்கேற்ப இயக்கி வருகிறோம். நடைமுறை சிக்கல்களை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இறங்கும் பயணிகள், பேருந்து நிலையத்தில் விரைவு பேருந்துகள் செல்லும் பகுதிக்குச் செல்ல இலவசமாக சிற்றுந்து சேவை வழங்க அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. முன்பதிவில்லா பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் அலைமோதினர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்த நடைமேடைகளில் பயணிகள் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது. இங்கு ரயில்கள் வந்து நின்றதுமே முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற பயணிகள் குவிந்தனர். அதேநேரம், ரயிலில் இருந்து இறங்க முடியாமல் பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் லேசான தடியடி நடத்தி ரயில்வே போலீஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
ரயில் நிலையங்களில் அசம்பாவிதம் ஏதும் நடக்காதவாறு ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியிருந்தனர். 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உடைமைகளை தீவிர சோதனை செய்த பிறகே ரயில் நிலையங்களுக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பயணமாகினர்.