‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் சென்னையில் இதுவரை 22,556 பேர் மனு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் சென்னையில் இதுவரை 22,556 பேர் மனு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் சென்னையில் இதுவரை 22,556 பேர் மனு அளித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் 15இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள புனித தோமையார் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சிறு தொழில் நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக வணிகக் கடன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது:

சென்னையில் கடந்த 5-ம் தேதிதொடங்கி 11-ம் தேதி வரை 75 இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 22,556 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், சேவைத் துறைகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. எந்தெந்த மனுக்களுக்கு எந்த துறை தீர்வு காண வேண்டும் என்று உறுதி செய்து, ஒரு மாதத்துக்குள் அந்த மனுக்கள் மீது தீர்வு வழங்கப்பட இருக்கிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்கும் குச்சியில் பாட்டிலை பொருத்தி நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக ஊடகத்தில் செய்தி வெளியானது. அது தவறானது. கட்டிலின் கம்பியில்தான் குளுக்கோஸ் பாட்டில் பொருத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று, ராயப்பேட்டைஅரசு மருத்துவமனையில் வேண்டும் என்றே குளுக்கோஸ் பாட்டிலைபொருத்தும் கம்பியில் இருந்து எடுத்து பெண்ணை பிடிக்க வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து தவறான செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in