Published : 13 Jan 2024 06:30 AM
Last Updated : 13 Jan 2024 06:30 AM
சென்னை: சென்னை கல்லூரிகளில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது பேருந்து மேற்கூரையில் நடனம், தர்ணா போராட்டம் என மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் தாமதமாக வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர்கள் நுழைவாயில் முன்பு கோஷம் எழுப்பியதுடன், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நின்று கூச்சலிட்டனர். பின்னர் அந்த வழியாக வந்த மாநகர பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். சிலர் பேருந்து களின் கூரை மீது ஏறி நடனம் ஆடினர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் மாணவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சில மாணவர்கள் திரண்டு வந்து, மூடப்பட்ட பச்சையப்பன் கல்லூரி நுழைவாயில் கதவுக்குமாலை அணிவித்து கோஷமிட்டனர்.
மாணவருக்கு கத்திக்குத்து: இதேபோல, நந்தனம் கல்லூரி பொங்கல் விழாவில் முன்னாள் மாணவர்கள் நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது முன்னாள் மாணவர்ஒருவருக்கு பாட்டில் குத்து விழுந்தது. அவர் மருத்துவமனையில் புற நோயாயாளியாக சிகிச்சை பெற்று சென்றார். பின்னர், அவர் அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை போலீஸார் பாட்டிலால் குத்திய மாணவரை கைது செய்தனர்.
இதேபோல் மாநில கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவிலும் முன்னாள் மாணவர்கள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு அனுமதி மறுத்ததால் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு தற்போது படிக்கும் மாணவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் எச்சரிக்கை: மேலும், மாணவர்களில் ஒரு தரப்பினர் சென்ட்ரல் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்து மீது ஏறிவேட்டியை கழற்றி கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களை எச்சரித்தும், எழுதி வாங்கிக் கொண்டும் போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT