

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பொது பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக, தமிழ்நாடு மலர் காய் கனி வியாபாரிகள் நலச்சங்கம், கீரை மொத்த வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் சென்னை கோயம்பேட்டில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் பொங்கலிட்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அன்புமணி பேசியதாவது:
என்னிடம் ஆட்சி இருந்தால்... கோயம்பேடு சந்தையை வேறு இடத்துக்கு மாற்றும் திட்டத்தை அரசு வைத்துள்ளது. மேலும் பேருந்து நிலைய இடத்தில் பொது பசுமை பூங்காவை உருவாக்க வேண்டும். வேறு திட்டம் அறிவிக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும். அடுத்த வெள்ளத்துக்குள் சென்னை தயாராக இருக்கும். ஏனெனில் பாமக ஆட்சி வரப்போகிறது
என்னிடம் ஆட்சி இருந்தால் ஒரு நாளில் மதுவையும், ஒரு மாதத்தில் கஞ்சாவையும் ஒழித்திருப்பேன். அடுத்த தலை முறையை வெற்றி பெறச் செய்யும் திட்டம் எங்களிடம் இருக்கிறது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தொழிலாளர் பிரிவு தலைவர் ஆர்.பாண்டியன், பசுமை தாயக செயலர் அருள், வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் வை.கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறும்போது, "போக்குவரத்துத் தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பொங்கல் விடுமுறையின்போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
சென்னைக்கு அருகே ஏரிகளை உருவாக்கி தேங்கும் நீரை அங்கு சேர்க்க வேண்டும். திட்டமிடல் தொடர்பான ஆவணம் பாமக சார்பில் தயார் செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ திமுகவின் தேர்தல் வாக்குறுதியையே நிறைவேற்ற கோருகிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு செல்வோம்’’ என்றார்.