Published : 13 Jan 2024 06:10 AM
Last Updated : 13 Jan 2024 06:10 AM

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாசிப்பு நிகழ்வு: பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்ற நூல் வாசிப்பு நிகழ்வில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 47-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கடந்த ஜன.3-ம் தேதி தொடங்கியது. கண்காட்சியின் ஒருபகுதியாக புத்தகவெளியீட்டு விழாக்கள், மாலை நேர சிறப்பு அமர்வுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி, புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கான ‘சென்னை வாசிக்கிறது’ எனும் நிகழ்வு கண்காட்சி வளாகத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர்பிரியா, திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சத்தமிட்டு நூல்களை படித்தனர். செல்போன் உட்பட டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாவதன் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டது.

மாணவர்களிடையே மேயர் பிரியா பேசும்போது, ‘‘புத்தக வாசிப்புதான் சிறந்த சமூகத்தை உருவாக்கும். எனவே, அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியமானது. புத்தகங்களை படித்து அதிலுள்ள கருத்துகளை அறிந்து கொள்வது நல்ல அனுபவமாக அமையும்’’ என்றார்.

கடந்த 10 நாட்களில் புத்தகக் காட்சியை சுமார் 4 லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் மக்கள் திரளாக வருவார்கள் எனவும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x