

பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், சிறை துறை பணியாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.500 மதிப்புள்ள பொங்கல் பரிசு கூப்பன்களை வழங்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், மதுரை மத்திய சிறையில் சிறைத் துறை டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் சிறைப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கூப்பன்களை வழங்கினர். தொடர்ந்து, பொங்கல் சிறப்பு சிறை சந்தை விற்பனையையும் டிஐஜி தொடங்கி வைத்தார்.
இந்த பரிசு கூப்பனை பயன்படுத்தி, சிறை சந்தையில் முற்றிலும் சிறைவாசிகளால் தயார் செய்யப்பட்டு விற்கப்படும் ரெடிமேட் ஆடைகள், சுங்கிடி சேலைகள், கைலி, செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு, காரம் உள்ளிட்டவற்றை வாங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.