

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி 3-வது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமாசுந்தரம், "இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மையான தொகையைத் திருத்தி பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்படும் அந்த ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வங்கிப் பரிவர்த்தனைகளையும், இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர் சேர்த்துள்ளனர். செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளன. அதேபோல், விவசாயம் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத் துறை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆவணத்தில் உள்ள தேதிகளை அமலாக்கத் துறை குற்றச்சாட்டுக்கு ஏற்றதுபோல் மாற்றியுள்ளனர். எனவே, இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “2016-2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவில் வேலைவாய்ப்பு தொடர்பாக யார், யாரிடமிருந்து எவ்வளவு தொகை பெறப்பட்டது, அவர்களது பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணம் பெற்றார் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. அதற்கான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிந்துவிட்டது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதனால், எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை" என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருந்தபோதும்கூட, ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றம் எதுவும் இல்லை என்பதால் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.