Published : 12 Jan 2024 05:06 AM
Last Updated : 12 Jan 2024 05:06 AM
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோயம்புத்தூர், பெங்களூரு - திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் - கோயம்புத்தூர், பெங்களூர் - திருச்சிராப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்: தாம்பரத்தில் இருந்து ஜன.17, 18 ஆகிய தேதிகளில் காலை 7.30 மணிக்கு சிறப்புரயில் (06085) புறப்பட்டு, அதேநாள்மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூரை அடையும்.
கோயம்புத்தூரில் இருந்து ஜன.16,17 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு சிறப்பு ரயில் ( 06086) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் 3-ம், மூன்று அடுக்கு எக்னாமிக் வகுப்பு பெட்டிகள் 12-ம், இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டிகள் 2-ம், பொதுபெட்டிகள் 2-ம் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
பெங்களூர் - திருச்சி: எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து ஜன.12-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு ரயில் (06577) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு திருச்சிராப்பள்ளியை அடையும். மறுமார்க்கமாக, திருச்சிராப்பள்ளியில் இருந்து ஜன.13-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு ரயில் (06578) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூருவை அடையும்.
இந்த ரயிலில் இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள் 2ம், மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் 6ம், இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டிகள் 8ம், இரண்டு பொது பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தரயில் திருச்சிராப்பள்ளி கோட்டை,கரூர், நாமக்கல், சேலம், பங்காரப்பேட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரண்டு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT