Published : 12 Jan 2024 05:36 AM
Last Updated : 12 Jan 2024 05:36 AM

தமிழகத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன் கருத்துகேட்பு: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 2024-ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைய உள்ளதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் கருத்துரு அனுப்புமாறு அரசு கடிதம் எழுதியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் அவ்வூராட்சியில் உள்ள மக்கள் தொகை அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும், மத்திய நிதி கமிஷன் நிதி, 100 நாள் வேலைத்திட்ட நிதி, பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ், 100 சதவீத மானியத்தில் கிராமப்புற மக்களுக்கு சொந்த வீடு கட்ட நிதியுதவி, தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்துடன் கழிப்பிடம் கட்டும் திட்டம், 100 சதவீத மத்திய அரசு நிதியில் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்காக பல திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு இதுபோன்ற மத்திய அரசின் நிதி வழங்கப்படுவதில்லை. நகரப் பகுதிகளுக்கு மாநில அரசு வழங்கும் நிதி மற்றும் அவர்கள் வசூலிக்கும் வரி வருவாய் மூலம்தான் பணிபுரிபவர்களுக்கு சம்பளம், சாலைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு செலவிட முடியும்.

எனவே, தற்போதுள்ள ஊராட்சிகளையோ அல்லது ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளையோ, நகரப் பகுதிகளுடன் இணைப்பதால் ஊராட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதி நின்றுபோவதுடன், புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளின், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும். வீட்டுவரி மற்றும் சொத்துவரி பல மடங்கு உயரும். புதிய வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். அதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

மேலும், ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்துக்கு வரும் மத்திய அரசின் நிதி பெருமளவு குறையும் அபாயமும் உள்ளது.

உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் 25 ஊராட்சிகளை 20 பேரூராட்சிகளுடன் இணைத்துக்கொள்ள பேரூராட்சிகள் இயக்குநரகம் மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைவதுடன், அம்மாவட்டத்துக்கு வரும் மத்திய அரசின் நிதி பங்களிப்பும் பெருமளவு குறையும். இதனால் அந்த 25 ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாத நிலைமை ஏற்படும்.

எனவே, தமிழகம் முழுவதும் இதுபோன்று ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x